மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் அருகே அழகர்கோவில் மற்றும் சுந்தரராஜன்
பட்டியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி படுஜோராக நடைபெற்று வருகின்றது. அழகர்மலை அடிவாரத்தில் இந்த மண்பானைகள் செய்யப்படுவதால், மூலிகை குணம் நிறைந்த தண்ணீர் மண்ணில் கலப்பதால் பானைகளுக்கு தனி மவுசு உள்ளதாக வாங்கி செல்லும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது தவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு இப்பகுதிகளில் பானைகளை கொள்முதல் செய்து வருவதால், பானைகள் தற்போது பற்றாக்குறை நிலவுவதாகவும் , அதிகளவு ஆட்களை வைத்து பானைகள் செய்யப்பட்டுவருவதாக கூறுகின்றனர். இங்கு செய்யப்படும் பானைகள் சுமார் 30 ரூபாய் 300 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றது.
சீசன் காலங்களில் மட்டுமே மண்பானைகள் விற்பனை ஆவதாகவும் பிற நாட்களில் மிக குறைந்த அளவிலே விற்கப்பட்டு வருவதாக மண்பானை தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு மண்பானை சமையல் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. அத்துடன், கோடை காலங்களில் மண் பானைகளில் குடிப்பதற்கு ஆங்காங்கே பானைகளில் தண்ணீர் வைக்கப்படுவது வழக்கம். கிராமங்களில் வீட்டு வாசலில் மண்பானை சமையல் செய்து கிராம மக்கள் உணவு அருந்தும் வழக்கத்தை கொண்டிருந்தனர். காலப்போக்கில், சமையல் செய்ய வெண்கலம், அதை எடுத்து அலுமினியம், தற்போது சில்வர் பானைகளில் சமையல் செய்யப்பட்டு வருகிறது. மண்பானை சமையல் என்றாலே உடலுக்கு நல்லது என முன்னோர்கள் கூறுவர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி