மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா வைகாசி திருவிழா பிரசித்தி பெற்றது.
தமிழகத்தில் மாரியம்மன் கோவிலில் அதிக நாட்கள் நடைபெறும் ஒரே திருவிழா சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஆகும். சோழவந்தான் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் 18 நாட்களில் வந்து செல்வார்கள். அவ்வாறு திருவிழா நடைபெறும் காலங்களில். சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் வழியாக உள்ள வைகை ஆற்றுபாதை பிரதான பாதையாகும். திருவிழா நடைபெறும் 18 நாட்களும் வைகை ஆற்றில் பக்தர்கள் நிறைந்து காணப்படுவர். இந்த சூழ்நிலையில், சோழவந்தான் பேரூராட்சி சார்பில், அங்கு கழிப்பறை கட்ட அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் துவக்க நிலையில் உள்ளன. இது சம்பந்தமாக, பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்
பேரூராட்சி தலைவரிடம் தங்களது ஆட்சேபனையை தெரிவித்து வந்தனர்.
மேலும் ,வைகை ஆற்றில் கழிப்பறை கட்டும் இடம் மிகவும் இட நெருக்கடியாக உள்ளதாகவும் அதனால் மாற்று இடத்தில் கழிப்பறை கட்ட கோரிக்கை விடுத்தனர். ஆனால், பொதுமக்களின் வேண்டுகோளை நிராகரித்து , பேரூராட்சி நிர்வாகம் அதே இடத்தில் கழிப்பறை கட்டும் நடவடிக்கையை எடுத்தது. இதனால், கழிப்பறை கட்டும் நடவடிக்கையை உடனே நிறுத்தக் கோரியும் ,மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக, மாவட்ட ஆட்சித் தலைவர், சோழவந்தான் வட்டப் பிள்ளையார் கோவில் அருகில் கழிப்பறை கட்டும் இடத்தை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு இட நெருக்கடி இல்லாத வகையில் மாற்று இடத்தில் கழிப்பறை கட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், நீர்நிலையில் கழிப்பறை கட்ட அனுமதி இல்லை என்று தமிழக அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி