விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். (65) வயதான இவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ராஜபாளையத்தில் இருந்து முகவூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மூதாட்டி மீது அசுர வேகத்தில் மோதியுள்ளது. இதனால், சாலையில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கிருஷ்ணம்மாள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
விபத்து நடந்த இடத்தில் பொது மக்கள் திரண்டவுடன் பேருந்து ஓட்டுனர் சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த சரவணக்குமார், நடத்துனர் ராஜபாளையத்தை சேர்ந்த சந்தன கார்த்தி ஆகியோர் அங்கிருந்து தப்பி விட்டனர். இந்த சாலையில் அசுர வேகத்தில் சென்ற தனியார் பேருந்து மோதி இது வரை அப் பகுதியை சேர்ந்த 3 பேர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அப் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், முகவூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இரண்டு புறமும் சுமார் ஒரு கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, வேகத்தடை இருக்கும் இடத்தில் கூட தனியார் பேருந்துகள் வேகத்தை குறைக்காமல் செல்வதாகவும், இது குறித்து புகார் அளித்தால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி பொது மக்கள் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயம் பேருந்து சக்கரத்தில் உள்ள காற்றை இறக்க முயன்றதாக கூறி ஒருவரை கைது செய்ய முயன்றனர். அவரை விடுவிக்க கோரிய மக்களுக்கும், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர்க்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது போன்ற தொடர் விபத்துகளை தவிர்க்க அப் பகுதியில் கூடுதலாக வேகத்தடை அமைக்கவும், தனியார் பேருந்துகளின் வேகத்தை குறைக்கவும், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய நிவாரணம் வழங்கவும் பொது மக்கள் காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இப் போராட்டத்தால், அந்த வழியாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி