சென்னை : அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்ட மத நல்லிணக்க “இப்தார் “நோன்பு திறப்பு நிகழ்வில் மக்களின் நலனுக்காகவும் , ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. சென்னை செங்குன்றம் ஆயிஷா மஸ்ஜித் பள்ளிவாசலில் மத நல்லிணக்க “இப்தார் “நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தலைமை இமாம் காஜா மொய்னுதீன் ஜமாலி, துணை இமாம் அபுல்ஹசன் பிலாலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செங்குன்றம் சரக காவல் உதவி கமிஷனர் ராஜாராபர்ட் மற்றும் அனைத்து சமூகங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் நாரவாரிகுப்பம் பேரூராட்சி தலைவர் , கவுன்சிலர்கள், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இமாம்கள் பேசியதாவது புனித இறை மறையான” குர்ஆன் ” உலக மக்களின் நலனுக்கு அருளப்பட்டதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது .
அதை கடைபிடிப்பதால் உடல் ஆரோக்கியமும் , மனநலமும் காக்கப்படுகிறது , மேலும் இன்றைய” இப்தார் ” நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சமூக மக்களுக்கும் உடல் நலனையும் ஒற்றுமையும் அளிக்க இறைவன் அருள்புரிய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இந்த பள்ளிவாசலில் செங்குன்றம் சுற்றுவட்டார இஸ்லாமிய நலச் சங்கத்தினர் சார்பில் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு “ஸஹர்” எனும் நோன்பு வைப்பதற்கான அதிகாலை உணவு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆயிஷா மஸ்ஜித் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர். பள்ளிவாசல் சொத்து மீட்பு குழு தலைவர் நாகூர் அனிபா மற்றும் சமியுல்லா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு