திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில், செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வார்டு கவுன்சிலர்கள் மீஞ்சூர் பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகவும், தெருக்களில் மின்விளக்கு இல்லாமல் இருப்பதாகவும், மீஞ்சூர் பஜாரில் வாகன நெருக்கடி காரணமாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர மீன் மார்க்கெட்டை மாற்றியமைக்கவும், கழிவுநீர் கால்வாய் அமைத்திடவும், தெருக்களில் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீஞ்சூர் சுற்று வட்டார பகுதி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றி அமைக்கவும், சுந்தர நகர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும், மீஞ்சூர் நியூ டவுன் பகுதியில் சாலை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மன்ற கூட்டத்தில் எடுத்துரைத்தனர். கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் அப்போது பதிலளித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு