திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் நீண்ட காலமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கண்ணம்பாக்கம் கிராம மக்கள் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தினருடன் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியல் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க மறுக்கும் கும்மிடிப்பூண்டி வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
மழைக்காலங்களில் கிராமத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகவும் அதிகாரிகள் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் அழைத்து கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார். கிராமத்தில் ஏற்கனவே சிலருக்கு பட்டா வழங்கியுள்ளதாகவும், அதிகாரிகளைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. கிராம மக்கள் போராட்டம் காரணமாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு