செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் ஜிஎஸ்டி சாலையில் சின்ன மேலமையூரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சின்ன முத்து மாரியம்மன் ஆலய ஆலயத்தில் 88-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா கூழ் ஊற்றுதல் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. அகில உலகத்திற்கும் கருணை கடலாகவும், தாயுள்ளம் கொண்ட லோக மாதாவாகவும், இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி என்ற மூன்று சக்திகளின் சொரூபமாகவும் பக்தர்களின் அனைத்து சங்கடங்களையும் நீக்கி வேண்டுவோர்க்கு அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றக்கூடிய சர்வ வல்லமை படைத்த பராசக்தி செங்கல்பட்டு நகரில் ஜிஎஸ்டி சாலை சின்ன மேலமையூரில் நடுநாயகமாக வீற்றிருந்து பிரம்மாண்டமாக அருள்மிகு சின்ன முத்துமாரி அம்மனாக அருள் பாலிக்கிறாள். கருங்கல்லால் அமைக்கப்பட்ட 64 அடி உயரம் 5 நிலை ராஜகோபுரம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ பிரதோஷ நாயகர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமிகள், மகாகால பைரவர் தனித்தனி சன்னதிகளில் அமைந்துள்ளனர். இத்திருக் கோவிலின் மகா கும்பாபிஷேகம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்டலாபிஷேக நிறைவு விழா கடந்த மே மாதம் 11-ம் தேதி மிக விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு 88 ஆம் ஆண்டு ஆடி திருவிழா, கூழ் ஊற்றுதல் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சின்ன முத்து மாரியம்மனை வழிபட்டனர். நேற்று இரவு சின்ன முத்து மாரியம்மன் திருவீதி உலா மிக விமரிசையாக நடைபெற்றது. ஜி.எஸ்.டி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, வீரகுடி வேளாளர் தெரு, பாரதியார் தெரு, காண்டீபன் தெரு, டாக்டர் வரதராஜன் தெரு வழியாக திருவீதி உலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வீதியுலா நிகழ்ச்சியில் வாணவேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க தஞ்சாவூர் கரகாட்ட குழுவினரின் கரகாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக புதுச்சேரி- தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருக்கோவிலுக்கு திடீரென வருகை தந்து சின்னமுத்துமாரியம்மனை வழிபட்டார். அப்போது சின்ன முத்து மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் சி.வி.என்.குமாரசாமி வரவேற்று மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினார். அப்போது அவரது சகோதரர்கள் சி.வி.என்.பரமசிவம், சி.வி.என்.லோகப்பிரபு மற்றும் சின்ன மேலமையூர் கிராம பொதுமக்கள் உடனிருதனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்