திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதிய ஊராட்சி உருவாக்குவது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுப்பப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட உத்தண்டிகண்டிகை கிராமம், ஆலாடு ஊராட்சியில் அடங்கிய ஆத்திரேய மங்கலம், புலிக்குளம் கிராமங்களை தனியாக பிரித்து புதிய ஊராட்சி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நேற்று அனுப்பப்பட்டு ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உத்தண்டிகண்டிகை கிராமத்தை தனியாக பிரித்து புதிய ஊராட்சி அமைத்திட வேண்டும் என கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தனர். அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாததால் இன்று கிராம மக்கள் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராமங்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகள், அரசின் நல திட்டங்கள் முறையாக கிடைப்பதில்லை எனவும் எனவே தங்களது கிராமத்தை பிரித்து புதிய ஊராட்சி அமைத்திட கிராம சபை தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் ஊராட்சி அலுவலகமும் சுமார் 3கிமீ தூரத்தில் அமைந்துள்ளது எனவும், தேர்தல் நேரங்களிலும் நீண்ட தூரத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுவதாகவும், 3கிராமங்களையும் சேர்ந்து சுமார் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதாகவும், இந்த 3கிராமங்களையும் இணைத்து புதிய ஊராட்சி ஏற்படுத்திட வேண்டும் என கேட்டு கொண்டனர். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் அதன் பேரில் ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் என பிடிஓ உறுதியளித்தார். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு