திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சுப்ரமணிய ஆசான் சிலம்ப கூடம் கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த சிலம்ப கூடத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளனர். சூளை சுப்பா பத்தர் பரம்பரையின் மூத்த ஆசான் சுப்ரமணிய ஆசானின் 17ஆம் ஆண்டு நினைவு தின சூழல் கோப்பை போட்டி தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சப் ஜூனியர், சீனியர் என 3பிரிவுகளில் ஆண், பெண் என போட்டியாயாளர்கள் வகைப்படுத்தப்பட்டு சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள், கத்தி, மான் கொம்பு, அலங்கார பாடம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் மாணவர்கள் சிலம்ப கம்புகளை சுழற்றி தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் சிலம்ப கம்பு கொண்டு தற்காப்புக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டப்பட்டன. மாணவர்கள் சிலம்ப கம்புகளை சுழற்றியதை பார்வையாளர்கள் கண் சிமிட்டாமல் மெய் சிலிர்க்க கண்டு ரசித்தனர். சுமார் 200 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் 3இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் ஒட்டுமொத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பொன்னேரி அணி சுப்ரமணிய ஆசான் 17ஆம் ஆண்டு நினைவு தின சூழல் கோப்பையை தட்டி சென்றது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு