திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சுற்றுவட்டார இடங்களில் நாளுக்கு நாள் கடல் நீர் உட்புகுந்து குடிநீர் உவர்ப்பு தன்மை அடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீரை பருகும் நிலை உருவாகி உள்ளது. சிலர் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கினாலும், பெரும்பாலான மக்கள் உவர்ப்பு நீரையே அருந்தி வருகின்றனர். வெள்ளிவாயல்சாவடி பகுதியில் உள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையின் பேரில் ஹிந்துஜா நிறுவனம் சார்பில் ரூபாய் 25லட்சம் மதிப்பீட்டில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. மக்களுக்கு சுவையான குடிநீர் வழங்கிடும் வகையில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இந்துஜா நிறுவனத்தின் சார்பில் நிறுவப்பட்டது.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வெள்ளி வாயல் சாவடி ஊராட்சிமன்ற தலைவர் பி. உமையாள் பொன்னுசாமி இந்துஜா நிறுவன செயல் அலுவலர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பொன் பாஸ்கர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மாரியம்மாள் டேனியேல், ரீட்டா ராஜேந்திரன், மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உவர்ப்பு நீரை அருந்தி வந்த நிலையில் சுவையான பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகிடும் வகையில் 25லட்ச ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கிய இந்துஜா நிறுவனத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு