திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவும் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர்.
எனினும் குறிப்பிட்ட நேரத்தில் கோவில் வெளிப்புற கதவு மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்த அவர்கள் தடுப்பு வேலிகள் மீதேறி குதித்து கோவிலுக்குள் சென்றனர். இதனை கண்ட காவல்துறையினர் அங்கு வந்தபோது கதவை திறந்து தங்களை கோவிலுக்குள் அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரிசன நேரம் முடிந்து கோவில் மூடப்பட்டதால் மற்றொரு நாளில் வந்து தரிசனம் செய்து கொள்ளுமாறு கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு