மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் “சமூக நீதி நாள் உறுதிமொழி” ஆணையாளர் ச.தினேஷ்குமார், தலைமையில் அனைத்து பணியாளர்களும் இன்று (16.09.2024) ஏற்றுக் கொண்டனர். தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் நாள் ஆண்டுதோறும் “சமூகநீதி நாள்” ஆக கொண்டாடும் விதமாக அனைத்து அரசு அலுவலங்களிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. உறுதிமொழி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபி மானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் என, ஆணையாளர் அவர்கள் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கணக்கு அலுவலர் பாலாஜி, கண்காணிப்பாளர் லட்சுமணன், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி