திருவள்ளூர்: கலைஞர் அமைச்சரவையில் பால்வளத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் க.சுந்தரம். ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் கழக துணை பொதுச்செயலாளர், உயர் மட்ட செயற்குழு உறுப்பினர், ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் என பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். முன்னாள் அமைச்சர் க.சுந்தரம். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார். அவருக்கு திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் உடலுக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தும் வகையில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். க.சுந்தரத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சுந்தரத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, காந்தி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஆகியோர் முதலமைச்சருடன் வந்து முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு