திருவள்ளூர் : சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 121 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, 50 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூபாய்.16.5 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பொது தரிசன வரிசை வளாகம், விளக்கு மண்டபம், அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம், வாகன நிறுத்துமிடம், விருந்தினர் மாளிகை, கழிப்பறை, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சிறுவாபுரி கோவிலில் நடந்த விழாவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் பிரதாப் கடந்த 4ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழமை வாய்ந்த ஆலயங்கள் புணரமைக்கட்டு வருவதாகவும், பல்வேறு ஆலயங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விரைவில் சிறுவாபுரி ஆலயத்திற்கு வந்து செல்ல வசதியாக 4வழி சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அப்போது தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அனிதா, உதவி ஆணையர் சிவஞானம்,பொன்னேரி வட்டாட்சியர் சிவகுமார்,கோயில் செயல் அலுவலர்கள் மாதவன்,பிரகாஷ்,ராஜசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு