திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையில் நெகிழி பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் திட்டத்தை ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற தூய்மை பணியில் பள்ளி மாணவர்கள், மகளிர் குழுக்கள், தன்னார்வலர்கள், பங்கேற்றனர். மிஷன் 4 மரைன் லைஃப்-க்கான லோகோவை ஆட்சியர் பிரதாப் வெளியிட்டார். பின்னர் பழவேற்காடு கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் கடல்வாழ் உயிரனங்களை பாதுகாத்தல் குறித்து ஆட்சியர் பிரதாப் எடுத்துரைத்தார். கடற்கரையில் குவிந்த கழவுகளை அகற்றிய அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, கடற்கரை சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், வாரந்தோறும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
எனவும், கடற்கரை மற்றும் கடல் உயிரினங்களை பாதுகாப்பது குறித்தும், அவை வாழ தகுதியான இடமாக மாற்றுவதற்காக மிஷன் 4 மரைன் லைப் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மெரினா கடற்கரையை போன்று இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆரணியாற்றில் பொன்னேரி நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.முன்னதாக பழவேற்காடு மீன் இறங்குதளம் முதல் லைட் அவுஸ் கடற்கரை வரை நெகிழி பொருட்களின் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு