சிவகங்கை : கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கே.பெத்தனேந்தல் ஊராட்சி, மணல்மேடு கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலையில், தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசின் அனைத்துத்துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில், கால்நடைப் பராமரிப்புத்துறையின் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும் மற்றும் கால்நடைகளை பேணிக்காத்திடும் பொருட்டும், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 20 முகாம்கள் என மாவட்ட அளவில் மொத்தம் 240 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒரு வட்டாரத்திற்கு ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.24 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் உள்ளது.
அதனடிப்படையில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்டத்தில் தொடங்கி வைக்கும் பொருட்டு, கடந்த 15.11.2022 அன்று காட்டாம்பூர் ஊராட்சியில் நான் தொடங்கி வைத்தேன். கடந்த ஒருமாதகாலத்திற்குள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடைத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் சிறப்பான பணியினை மேற்கொண்டு, இதுவரை 61 கால்நடைக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளனர்.
அதன்தொடர்ச்சியாக, இன்றையதினம் கே.பெத்தனேந்தல் ஊராட்சி, மணல்மேடு கிராமத்தில் 62-வது கால்நடை சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, இம்முகாமினையும் தொடங்கி வைப்பதற்கும், இதன்மூலம் இப்பகுதி மக்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காகவும், நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். மேலும், கிராமப்புறப் பகுதிகளின் மேம்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காத்து வருகிறார்கள். மேலும, விவசாயிகளின் நிலங்களை உழுவதற்கும் மற்றும் பால் தந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உற்றத்தோழனாக விளங்கி வரும் கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையில், கால்நடைகளுக்கு தேவையான உணவு உற்பத்திப் பொருட்கள், மருந்தகங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ முகாம்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி, கால்நடைகளை பேணிக்காப்பதற்கான நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், நல்லாட்சியுடன் தற்போது, தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். இதன்மூலம் ஊரக வளர்ச்சித்துறையில் அனைத்துக் கிராமப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியினை சிறப்பாக மேற்கொண்டதைத் தொடர்ந்து, தற்போது கூட்டுறவுத்துறையில் அந்தந்த கிராமப்புறங்களின் பொருளாதாரத்தினை மேம்பாடு அடையச் செய்யும் வகையிலும், விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கிடவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் பொருட்டு, சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவிகள், விதவை தாய்மார்களுக்கான கடனுதவிகள் உள்ளிட்ட பயன்களை தகுதியானவர்களுக்கு கிடைக்கப் பெறச்செய்யும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதுதவிர, நுகர்வோர்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் பொருட்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிமைப்பொருட்களை தரமான முறையில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும், விவசாயிகள் பெறும் கடனுதவிகளை உரியகாலத்தில் திரும்பச் செலுத்தி, மீண்டும் அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசால் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, சம்மந்தப்பட்ட துறைகளை முறையாக அணுகி பயன்பெற வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.1,00,00 வீதம் மொத்தம் ரூ.12,00,000 மதிப்பீட்டிலான கறவைமாடு கடனுதவிகளும், 56 பயனாளிகளுக்கு கறவை மாடு பாத்திரங்களும், சிறந்த கிடேரிக்கன்று வளர்த்தல் மற்றும் அதிகம் பால் வழங்கிய 6 விவசாயிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களும், 25 விவசாயிகளுக்கு கால்நடை தீவன புல்கட்டுகளும், திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.3,00,000 வீதம் மொத்தம் ரூ.15,00,000 மதிப்பீட்டிலான கடனுதவிகளும் என, ஆக மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கூட்டுறவுத்துறை அமைச்சர் வழங்கினார். முன்னதாக, கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க கண்காட்சியினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.நா.நாகநாதன், துணைப்பதிவாளர், பால்வளம் (மானாமதுரை) இரா.செல்வம், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், கே.பெத்தனேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் இராமேஸ்வரி, கால்நடைப் பராமரிப்புத்துறை துணை இயக்குநர் எஸ்.முகமதுகான், உதவி இயக்குநர்கள் சரவணன், ராம்குமார், கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள், கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி