விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியில்
அகழாய்வு ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்ட ஆராய்ச்சி பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 2ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி பணிகளுக்காக தற்போது, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து 2ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி பணிகளுக்கான ஆயத்த பணிகளை தொல்லியல் துறையினர் பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.
அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை சுத்தம் செய்தல், அகழாய்வு குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் சங்குவளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய் உள்ளிட்ட 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தப் பகுதியில் சங்கு வளையல் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் வசித்த மக்கள், கடல் வழி மார்க்கமாக வெளி நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்ததற்கான சாட்சியங்களாக பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறினர். 2ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி பணிகளில் கிடைக்கும் அரிய வகை பொருட்களைக் கொண்டு, இந்தப் பகுதி மக்களின் தொன்மை மற்றம் வாழ்வியல் முறைகளை முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி