செங்கல்பட்டு : தமிழக முதல்வர் அறிவித்தவுடன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று பொதுமக்களிடம் தாசில்தார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை பொதுமக்கள் வாபஸ் பெற்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட இருளர்கள், ஆதிதிராவிடர்கள், கல்லுடைக்கும் ஏழை தொழிலாளர் குடும்பத்தினர் உட்பட அனைத்து தரப்பு குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்து வலியுறுத்தி வந்தனர். இதில் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வே செய்யப்பட்டு அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் இருந்தபோது கடந்த 2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடியாது நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அனைத்து கோப்புகளும் மாயமாகிவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன கோப்புகளை கண்டுபிடித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் அல்லது புதிதாக சர்வே செய்யப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்மன் கோவில் தெருவில் குடியிருந்து வரும் இருளர்கள் பகுதியில் பொதுமக்களின் சார்பில் ஊராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் சசிகலாதனசேகரன் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று கடந்த 7 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இது குறித்து காலை 10 மணி அளவில் பொதுமக்களிடம் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறும் வண்டலூர் தாசில்தார் கூறினார்.
இதனையடுத்து “கிராம மக்கள் சபை கூட்டம்” ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் பகுதி மற்றும் விநாயகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4-வது வார்டு உறுப்பினர் சசிகலாதனசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறு-குரு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்து அதற்கான பணிகளை தொடங்கினால் மட்டுமே மேற்படி உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவோம் என்றும், இல்லையென்றால் திட்டமிட்டப்படி மேற்படி உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம் என்றும் கூட்டத்தில் ஏக மனதாக பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் விநாயகபுரம் பகுதியில் விளையாட்டு திடல், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சியகம், சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்து மூடி போட வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி சீரான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் கிணற்றில் சைடு பகுதிகளில் போர்வெல் அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும். தெரு சாலைகளை சீரமைக்க வேண்டும். கால்வாய் இல்லாத பகுதிகளில் கால்வாய்கள் அமைக்க வேண்டும். புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அனைவருக்கும் பிரதம மந்திரி வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்தவர்களுக்கு பணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா தலைமையில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் காயார் போலீசார் கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் மற்றும் இருளர்கள் பகுதியில் உள்ள மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். பின்னர் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் புஷ்பலதா பொது மக்களிடம் கூறுகையில், நீங்கள் குடியிருக்கும் பகுதி சென்னை ஒட்டியபடி உள்ள பெல்ட் ஏரியா என்பதால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனாலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்குவோம். மேலும் சாலை, கால்வாய், சமுதாயக்கூடம், விளையாட்டு திடல், சீரான குடிநீர், தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என்றார். அப்போது தாசில்தருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து மேற்படி உண்ணாவிரத போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக கூறினர். இதனை அடுத்து முருகமங்கலம் கிராம பகுதியில் சென்று சாலை ஓரத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளை தாசில்தார் பார்வையிட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக பொதுமக்களிடம் உறுதி அளித்து விட்டு சென்றார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்