திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரை அடுத்த புழுதிவாக்கம் கிராமம் காமராஜர் துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு 41 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவானது கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பக்தர்கள் விரதம் இருந்து, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு நேற்று இரவு 7 மணி அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். குழந்தைகள் முதல் ஆண்கள் பெண்கள் என சுற்று வட்டார பகுதிகளான ஆரம்பாக்கம், காட்டுப்பள்ளி, நெட்டுக்குப்பம், எண்ணூர், மவுத்தம்பேடு, காலாஞ்சி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு மணி நேரம் கொட்டும் மழையிலும் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் தலை மேல் கரகத்துடனும் உடல் முழுவதும் அலகு குத்தியும், நாக்கு, வாய், உள்ளிட்ட இடங்களில் அலகு குத்தியும், கைகளில் அருவாள், வேல்கம்பு உள்ளிட்ட பொருட்களுடன் பல்வேறு வேடம் அணிந்தும் தீமிதித்தனர்.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்த சபா நிர்வாகிகளின் கத்தி, கரகம், கடாயுதம், ஜாட்டி, பாலை, போன்ற பொருட்களை கையில் ஏந்தி நடனமாடி பக்தர்களை பரவசப்படுத்தினர். இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் நெட்டுக்குப்பம் கிராமத்த்தை சேர்ந்த அருள்மிகு பக்த சபா குழுவினர் தலைவர் பாலு, செயலாளர் தேசப்பன், பொருளாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் கிருஷ்ணன், துணைச் செயலாளர் ராஜேந்திரன், துணைப் பொருளாளர் கஜேந்திரன், குருசாமி செல்வம், உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காட்டூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு