திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தத்தைமஞ்சி கிராமத்தில் ஆரணியாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு சுவர் பணிகளை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், தற்போது முதலமைச்சர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் 350கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
ஆரணியாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் பல்வேறு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தார். தத்தைமஞ்சி கிராமத்தில் 20கோடி மதிப்பீட்டில் ஆரணியாற்றில் வெள்ள தடுப்பு சுவர் மற்றும் கரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாத்திப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வசிக்கும் சூழல் உருவாகும் என தெரிவித்தார். மேலும் சோழவரம் ஏரி 40கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திருநின்றவூர், சேக்காடு உள்ளிட்ட இடஙக்ளில் கொசஸ்தலை ஆற்றில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். ஆண்டார்மடம் கிராமத்தில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பல ஆண்டுகள் கோரிக்கை தற்போது அறிவியல் பூர்வமான வெள்ளத்தடுப்பு சுவர் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். செப்டம்பர் மாதத்திற்குள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிக்கப்பட வேண்டும் என தலைமை செயலர் அறிவுரை வழங்கியுள்ள நிலையில் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் மாவட்டத்தில் தற்போது வரையில் பாதிப்புகள் ஏதும் இல்லை எனவும், வீடுகள் பாதிப்போ, கால்நடைகள் உயிரிழந்தாலோ உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு