செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் கலை அறிவியல் கல்லூரியில் 27ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அவ்விழாவில், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் இரா. அம்பலவாணன் கலந்து கொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். மூன்று மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றனர். மொத்தம் 693 பேர் நேரடியாகப் பட்டம் பெற்றனர். கல்லூரியின் தாளாளர் செல்வி ஹரிணி ரவி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வாசுதேவராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களை துணை முதல்வர் பேராசிரியர் கா. மதியழகன் அறிமுகம் செய்து வைத்தார். மின்னணுவியல் துறைத் தலைவர் ஹார்ஸிலி சாலமன் அனைவரையும் வரவேற்றார். காட்சித் தகவலியல் துறைத் தலைவர் பேராசிரியர் பொ. நடராஜன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
சிறப்புரை ஆற்றிய சிறப்பு விருந்தினர் இரா. அம்பலவாணன், கல்வி வளர்ச்சியை குறிப்பிட்டுப் பேசினார். தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோருக்கான சான்றிதழ் படிப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார். கல்விச் சிந்தனைகளைக் குறிப்பிட்டுப் பேசினார். “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு; மாடல்ல மற்றை யவை” என்கிற குறளின் சிறப்பையும் , “தோட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” எனும் திருக்குறளின் பெருமையும் சுட்டிக்காட்டிப் பேசினார். மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்