திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் 1956 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 68 ஆண்டுகள் பழமை வாய்ந்த டிவிஎஸ் ரெட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தற்போது வரை சிறப்பாக மாணவர்களை உருவாக்கி வருகிறது. கடந்த 1984 ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் 87-ம் ஆண்டு வாக்கில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்களில் வழக்கறிஞர் பத்மநாபன், தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, மும்பை கண்ணன், சதீஸ், சிவானந்தம், கிருஷ்ண பிரசாத், பாலா மணி, பாலாஜி, முரளி, தாஜ்தீன், அன்பு தாஸ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் முன்னாள் மாணவர்களுடன் கடந்த 3 மாதமாக வாட்ஸ்அப் குழுவில் அனைவரையும் ஒன்றினைத்து மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் முதல் நிகழ்ச்சியாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டு முன்னாள் பள்ளி மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களை வணங்கி வரவேற்றனர்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற 16 ஆசிரியர்கள் களுக்கு நினைவு பரிசுகள், சந்தன மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். மேலும் டி.வி.எஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் நினைவாக பள்ளியில் உள்ள ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து ரூ.1.50 இலட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுத்தனர். அரசு தனியார் நிறுவனம், சுயதொழில், வெளிநாடு என பல்வேறு பணிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறைகளையும் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த மலரும் நினைவுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து அவர்களை கௌரவித்து அவர்களுடனான நினைவுகளையும் நிகழ்வில் நினைவு கூர்ந்தனர். தங்களது பள்ளி கால நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அவர்களை ஆரத்தழுவியும், அனைவரும் செல்ஃபி எடுத்தும் முந்தைய நினைவுகளை அசை போட்டனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தாங்கள் கல்வி பயின்ற பள்ளிக்கு உபகரணங்களை முன்னாள் மாணவர்கள் தங்களது நினைவாக வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பள்ளி துவங்கிய காலத்தில் இருந்து ஓய்வு பெறும் வரை பணி செய்த தற்போது 91 வயதாகும் முன்னாள் தலைமை ஆசிரியர் பாஸ்கர் ரெட்டி என்பவருக்கு முன்னாள் மாணவர்கள் வணங்கி அவரிடம் இருந்து வாழ்த்து பெற்று அவருக்கு மரியாதை செலுத்தி கௌரவப்படுத்தினர். பள்ளியின் நிர்வாக குழு தலைவர் திருமதி.ஸ்ரீமதி மற்றும் அவரது குடும்பத்தினரை கௌரவப்படுத்தினர்.150 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தங்களுடன் பயின்ற சக மாணவ மாணவியர்களுக்கும் தங்களை உருவாக்க பாடுபட்ட ஆசிரிய பெருமக்களுக்கும் சுவையான காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு