மதுரை : தமிழ்நாடு முதலமைச்சர், காணொளி காட்சி வாயிலாக மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை, பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நலனுக்காக அவர்தம் உற்பத்தி பொருட்களை சிரமமின்றி விற்பனை செய்து பயன் பெற ஏதுவாக மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பூமாலை வணிக வளாகம் கடந்த 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பூமாலை வணிக வளாகத்தில் 35 கடைகள் உள்ளன. இந்த பூமாலை வணிக வளாக கட்டடம் தற்போது, ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை, தமிழ்நாடு முதலமைச்சர், இன்றைய தினம் காணொளி காட்சிகளாக பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். இதனையடுத்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட பூமாலை வணிக வளாக கட்டடத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் , கூடுதல் ஆட்சியர் திரு.செ.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி