செங்கல்பட்டு: செங்கல்பட்டு, ஏப்.8: கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை என்று கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறுகையில், கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரத்தில் அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் 12 குடும்பத்தினர் குடிசை வீடு மற்றும் ஓட்டு வீடு கட்டி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் குடியிருந்து வந்தோம்.
இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்காலத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மேற்படி பகுதியில் 1760 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்காக 12 குடும்பத்தினரின் வீடுகளில் மின் இணைப்புகளை துண்டித்து விட்டு ஈவு இரக்கம் இன்றி வீடுகளை இடித்து தள்ளினர். அப்போது மாற்று இடம் ஒதுக்கி தரும்படி கேட்டதற்கு, படப்பை அடுத்த நாவலூரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருகிறோம் அங்கே சொல்லுங்கள் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறினர். அதற்கு நாங்கள் எங்களுடைய குழந்தைகளை இதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படிக்க வைத்துள்ளோம். அதனால் நாங்கள் அங்கே போகமாட்டோம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
அதன் பின்னர் இதே பகுதியில் மேற்படி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முடித்த பின்பு அதில் வீடு ஒதுக்கி தருகிறோம் என்று அலுவலர்கள் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் இதுவரை எங்களுக்கு இலவசமாக வீடு ஒதுக்கி தரப்படவில்லை. இதனால் நாங்கள் அதே பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை வலியுறுத்தி மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே எங்கள் குடும்பத்தினரின் மீது மாவட்ட கலெக்டர் கருணை வைத்து மேற்படி கீரப்பாக்கம் திட்ட பகுதியில் 12 குடும்பத்தினருக்கும் இலவசமாக வீடு ஒதுக்கி தரவேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்