திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாடு ஊராட்சி, ஏரிமேடு பகுதியில் சுமார் 42 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக களத்து மேடு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர். இதில் பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 31 பேரும் இதர சமூகத்தினர் 19 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில் 19 குடும்பங்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு விடுபட்டுள்ளது. பல ஆண்டுகளாக பட்டா கேட்டு மனு செய்தும் எவ்வித பயணம் இல்லை. இதனால் மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவுப்படி 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் நபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின் படி இப்பகுதியில் கணக்கெடுப்பு செய்து விடுபட்டுள்ள நபர்களுக்கு பட்டா வழங்க கோரி பாஜகவினர் அப்பகுதி மக்களுடன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சுந்தரம், அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் அழிஞ்சிவாக்கம் பாஸ்கர், மாநில பட்டியல் அணி செயலாளர் அன்பாலயா சிவகுமார், மாவட்ட பொருளாளர் கே.ஜி.எம்.சுப்பிரமணி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் பிரபு, பொருளாளர் சத்யா, முன்னாள் ஒன்றிய தலைவர் அன்பு, மத்திய அரசு பிரிவு மாவட்ட செயலாளர் கவிதா மற்றும் நிர்வாகிகள் புருஷோத்தமன் நாகபூஷணம் மற்றும் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு