மதுரை: மதுரை மாவட்டம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 8.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கையிழை தடகள மைதானம் மற்றும் இயற்கை புல் கால்பந்து மைதானத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மதுரை டாக்டர். எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
காணொளி காட்சி வாயிலாக ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கையிழை தடகள மைதானம் மற்றும் இயற்கைபுல் கால்பந்து மைதானத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஸ்டார் அகாடமி மதுரை மாவட்ட விளையாட்டு பளுதூக்குதல் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். மேலும், மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருத்தப்புலியன்பட்டி கிராமம் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீமானூத்து கிராமத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கு விளையாட்டுகளை முழுதிறனுடன் அணுகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பிரபலமாக வீரர்கள் / வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்ய இயலும் என்பதனை கருத்தில் கொண்டு, தகுதியான பயிற்றுநர்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுக்களில் நியமனம் செய்து வீரர்கள்/வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் – STAR (SPORTS TALENT ADVANCEMENT & RECOGNITION) அகாடமி விளையாட்டு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,
மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) , ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , துணை மேயர் நாகராஜன் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் பி.வேல்முருகன் , மதுரை மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் முனைவர் க.ராஜா, விளையாட்டு விடுதி மேலாளர் ஆ.முருகன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி