சிவகங்கை: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் (20.11.2023) அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை / வரைபடம்’ ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி