மதுரை: மாணவர்கள் தைரியத்துடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம். அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேச்சு. மாணவர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று மதுரை லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. லதா மாதவன் கல்லூரி ஆண்டு விழா
அழகர் கோவில் லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நிறுவனங்களின் சேர்மன் டாக்டர் டத்தோ கரு. மாதவன் தலைமையில் நடைபெற்றது.
கல்லுரி முதல்வர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்கலைக்கழகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் விளையாட்டு, என்.சி.சி மற்றும் பல்வேறு.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. தன்னம்பிக்கை மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடனும் இணைந்து செயல்பட்டால் மிகப்பெரிய ஆளுமையாக வளரலாம், தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்த தேசத்தின் வளர்ச்சியையும் நினைவில் கொண்டு சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும்.
அதைப் போல ஆசிரியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாணவரையும் ஊக்குவித்து மாணவர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தூக்கத்தில் வருவது அல்ல கனவு எது உங்களை தூங்கவிடாமல் துரத்துகிறதோ அதுவே கனவு என்றார். ஒவ்வொரு மாணவ மாணவியரும் வாழ்க்கையில் பெரிய நிலைக்கு வர கனவு காண வேண்டும். பெரிதினும் பெரிது கேள் என்றார் மகாகவி பாரதி. இவ்வாறு நெல்லை பாலு பேசினார். அவருக்கு கல்லூரி சேர்மன் டத்தோ கரு மாதவன் நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்தார். விழாவில் செயல் அலுவலர்கள் முத்துமணி , பிரபாகரன் மீனாட்சி சுந்தரம் காந்தி நாதன் லதா மாதவன் கல்லூரிகளின் முதல்வர்கள் சரவணன், தவமணி பள்ளி முதல்வர் புவனேஸ்வரி, பாலிடெக்னிக் துணை முதல்வர் ஜெயபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர் . விழாவினை கணினித்துறை தலைவர் பார்வதி ஒருங்கிணைத்தார். துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி