திருவள்ளூர்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேர்தல்களில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்பட்டது வருகிறது. அந்த வகையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களுடன் இணைந்து சார் ஆட்சியர் பேரணியில் பங்கேற்றார். 18வயதிற்கு மேல் உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும், ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், நேர்மையானவரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும், வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் எனவும் பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர். வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு சார் ஆட்சியர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி அம்பேத்கர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேரணி முடிவடைந்தது. முன்னதாக வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம், கட்டாயம் வாக்களிப்போம் என்று மாணவர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு