திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில் சென்னை வெளிவட்ட சாலை மற்றும் சென்னை எல்லை சாலை பணிகளுக்காக செம்மண் குவாரிக்கு அண்மையில் கனிமவளத்துறை அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குவாரி அனுமதித்த இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என கேட்டு தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து செல்ல மறுத்ததால் குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர் கோபி நயினார் உள்ளிட்ட 44பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் பொன்னேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக சாலை பணிகளுக்காக மண் அள்ள அனுமதி அளித்துள்ள அரசு ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்திட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குவாரிக்கான அனுமதியை ரத்து செய்து மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு