திருவள்ளூர்: வடகாஞ்சி என்றழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் வைகாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இன்று காலை கொடியேற்றத்தின் ஒருபகுதியாக வரதராஜ பெருமானுக்கும் பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க வேதமந்திரங்கள் ஓதியபடி பட்டாச்சார்யார்கள் கொடிப்பட்டத்தை கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தி மகாதீபாராதணை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வரதராஜ பெருமான் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமானை தரிசித்து சென்றனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 3ம் நாள் கருட சேவையும், 7ம் நாள் ரத உற்சவமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு