சிவகாசி : இந்திய நாட்டின் 75,வது சுதந்தரதின விழாவை, அமுதப்பெரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இந்த ஆண்டு சுதந்திர நாளில் வீடுகள் தோறும், 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து சிவகாசி அச்சகங்களில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு தயாரிப்பில் மட்டும் சிறந்ததல்ல, அச்சகத் தொழிலிலும் மிகவும் புகழ் பெற்றது தான். சிவகாசி அச்சகங்களில் அனைத்து வகையான அச்சுப் பணிகளும் நடந்து வருகிறது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக்கொடி அச்சிடும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வழக்கமாக சுதந்திர தினத்தன்று மட்டும், தேசியக்கொடியை சட்டைகளில் அணியும் வழக்கம் இருந்து வந்தது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றில் மட்டும் துணியினாலான தேசியக்கொடி ஏற்றப்படும். இதனால் தேசியக்கொடியின் தேவை அதிகளவில் இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை போற்றும் வகையில், அமுதப்பெருவிழாவாக நாட்டுமக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.
மேலும், வீடுகள் தோறும் 3 நாட்களுக்கு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்ததையடுத்து, தேசியக்கொடிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிவகாசி அச்சகங்களில் சட்டைகளில் அணியும் தேசியக்கொடி, வாகனங்களில் வைப்பதற்கான தேசியக்கொடி, வீடுகளில் ஏற்றுவதற்கான தேசியக்கொடி என பல ரகங்களில் தேசியக்கொடிகள் தயார் செய்யப்பட்டு பல ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக, சிவகாசி அச்சகங்களில் தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி