சிவகங்கை : ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் , மாணாக்கர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்த வருகிறார்கள்.
தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கு அருகில் போதை தரக்கூடிய சில வகைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும், இதனால், மாணாக்கர்களின் நலன்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், வரப்பெறும் தகவல்களின் அடிப்படையில் அதனை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் , போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டு, போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள என, அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதன்படி , அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு தமிழகம் முழுவதும் ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் காரைக்குடி பகுதியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ள மினி மாரத்தான் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. போதையற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிடவும், அனைவரின் உடல் நலத்தை பேணிக் காத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர், கருத்தான போதை ஒழியட்டும்! பாதை ஒளிரட்டும்! என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரால், தொடங்கப்பட்ட இந்த மினி மாரத்தான் போட்டியானது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கவியரசு கண்ணதாசன் மணி மண்டபம் அருகில் நிறைவடைந்தது. இப்போ போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு சான்றிதழ்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் ராஜமோகன், துணைப்பதிவாளர், அலுவலக உறுப்பினர்கள் வி.சாமிநாதன், எஸ்.கருப்புசாமி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் என்.பிரபாகரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், காரைக்குடி நகர் மன்றதலைவர் முத்துதுரை, கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம்,அசோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ராதாசுப்பிரமணியன், செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், பேரூராட்சித் தலைவர்கள் ராதிகா இராமச்சந்திரன் (கானாடுகாத்தான்), கார்த்திக் சோலை (கோட்டையூர்), சங்கீதா செல்லப்பன் (கண்டனூர்), காரைக்குடி வட்டாட்சியர் இரா.மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி