விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மடத்துபட்டி பகுதியில் உள்ள அருகாமைப்பள்ளி அமைப்பும், சிவகாசி முகநூல் நண்பர்கள் குழு அமைப்பும் இணைந்து, நாட்டின் 75, வது சுதந்திர அமுதப் பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் படிப்பு, விளையாட்டு, தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது. க.மடத்துப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஜெயமேரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு.மேகநாதரெட்டி, சிவகாசி ஆட்சியர் பிரிதிவிராஜ், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா இன்பம், துணை மேயர் திருமதி.விக்னேஷ்பிரியா, ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மடத்துப்பட்டி ஆரம்பப்பள்ளியின் 3ம் வகுப்பு மாணவி ரக்சிதா, சுதந்திரப் போராட்ட வீரர்கள் 150 பேர்களின் பெயர்களை கூறி அசத்தினார்.
இந்த சாதனையை செய்த மாணவி ரக்சிதாவிற்கு டிரம்ப் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ததுடன் அதற்கான உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் தாயில்பட்டி, மடத்துப்பட்டி, நதிக்குடி பகுதிகளில், உள்ள அரசுப்பள்ளி மாணவிகள் 75 பேர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட 75 தலைவர்களின் வேடங்கள் அணிந்து வந்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்து பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிகளை சிவகாசி முகநூல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் சிவகாசி எம்எல்ஏ அசோகன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் சூரியா, சேவுகன், மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், தாசில்தார் லோகநாதன், வருவாய் ஆய்வாளர் விக்னேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜெயமேரி நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி