விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கோதைநாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சுவாமி கும்பிடுவதில் பிரச்சினை மற்றும் தகராறு இருந்து வந்தது. இதனால் பதற்றத்தை தவிர்ப்பதற்காக, பிரச்சினைக்குரிய கோவில் இருக்கும் பகுதியில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை, ஒரு தரப்பைச் சேர்ந்த பரமன் என்பவரின் மகன் தங்கப்பாண்டியன், மில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர், தங்கப்பாண்டியனை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த தங்கப்பாண்டியன் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி தகவலறிந்த தங்கப்பாண்டியனின் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து, மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கப்பாண்டியனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்து வருகின்றனர். பதற்றம் அதிகமானதையடுத்து, ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில், போலீசார் மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடந்து வருவதால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. இதனால் கடுமையான போக்கவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய காவல்துறையினர், வழக்குபதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அந்தப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை இருப்பதால், பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர், குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி