சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், ஆகியோர் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரியை மாவட்ட ஆட்சி தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில் தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி, சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் (காரைக்குடி) மாங்குடி, (மானாமதுரை), தமிழரசி ரவிக்குமார் சட்டத்துறை செயலாளர் (நிதித்துறை விவகாரங்கள்) கார்த்திகேயன், சட்டக் கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், அரசு சட்டக்கல்லூரி தனி அலுவலர் ராமபிரான் ரஞ்சித்சிங், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். சட்டத்துறை அமைச்சர் தனது உரையில் “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் சிறப்பான ஆட்சியினை தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திவருகிறார்.
அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 15 சட்ட கல்லூரிகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றபிறகு முதலாவது சட்டக்கல்லூரியை காரைக்குடியில் தொடங்குவதற்கு ஆணையிட்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 87 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு சட்டக் கல்லூரியில் இடம் கிடைக்கப்பெற்றது. இந்த ஆண்டு அதைவிட அதிக மதிப்பெண் பெறும் மாணாக்கர்களுக்கும் சட்டக்கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் புதிதாக சட்டக் கல்லூரி அமைப்பதற்காக நடுவன் அரசின் முன்னாள் அமைச்சர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஒருங்கிணைந்து முயற்சி மேற்கொண்டதன் அடிப்படையில் காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி தற்காலிக கட்டிடத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது.
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பாக சட்டப்படிப்பு வழங்கி வருகிறது. மகளிர் படித்து முன்னேற்றம் காணும்போதுதான் நாடு முன்னேற்றம் அடையும். தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அனைத்து படிப்பு பிரிவுகளிலும் மாணவர்களைவிட அதிக அளவில் பெண்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற அரசாக தமிழக முதல்வரின் தலைமையிலான அரசு திகழ்ந்து வருகிறது. காரைக்குடியில் தொடங்கப்பட்டுள்ள இச்சட்டக் கல்லூரியில்கூட ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் சேர்ந்துள்ளனர். சட்டக் கல்விக்கு என்று பல்கலைக்கழகம் அமைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். மாணாக்கர்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல்நேர வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, காரைக்குடியில் துவக்கி வைக்கப்பட்டுள்ள இச்சட்ட கல்லூரியில் பயின்று வரும் மாணாக்கர்கள் நல்ல முறையில் பயின்று அதிக மதிப்பெண் பெற்று தங்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தி பெற்றோர்களுக்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தமது உரையில், “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எதிர்கால தூண்களாக விளங்கிவரும் மாணவர்கள் அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற அடிப்படையில் எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிராமப்புற மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதிதாகவும் பல்வேறு பாடப்பிரிவுகளின் கல்வி கட்டிடமும் வழிவகை செய்துள்ளார். நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சட்டக் கல்லூரியின் தேவை அத்தியாவசியமானதாக திகழ்கிறது. பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு இணையாக சட்டக் கல்வி படிப்பும் தற்போது முக்கிய அங்கம் வைத்து வருகின்றது. அரசின் சார்பில் 15 சட்ட கல்லூரிகள் உள்ளன. புதிய சட்ட வல்லுநர்களை உருவாக்குகின்ற வகையில் புதியதாகவும், கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றது. அதன்படி வரலாற்று சிறப்புமிக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் தற்சமயம் தற்காலிக கட்டிடத்தில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு சட்டப்படிப்பும், மூன்று ஆண்டு சட்டம் படிப்பும் படிக்கின்ற வகையில் இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இச்சட்ட கல்லூரிக்கு விரைவில் நிரந்தர கட்டணம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் அப்பணிகள் தொடங்கப்பட்டு சட்டக் கல்லூரிக்கு நிரந்தர கட்டணம் அமைய உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற என்ற வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுகின்ற வகையிலும், திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்று செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாணாக்கர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாநிலங்களவை உறுப்பினரும் நடுவன் அரசின் மேனாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் தமது உரையில், “தமிழக முதல்வர் தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்பொருட்டு காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு புதிய அரசு சட்டக் கல்லூரியினை நிறுவியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கியதற்கு வழிவகை வகுத்துத்தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளதை தொடர்ந்து தற்போது சட்டக் கல்லூரியும் கிடைத்துள்ளது. இவை நாம் அனைவரும் பெருமை கொள்ளும் விதமாக அமைகின்றது. தற்போது போட்டிமிகுந்த கல்வியாக, சட்டக் கல்வி திகழ்ந்து வருகிறது. மாணாக்கர்களிடையே சட்டக் கல்வி மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மிகுந்த அளவில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து நன்முறையில் பயின்று சட்டத்துறையில் சாதனை படைக்க வேண்டும். சட்டக்கல்வி பயின்ற பெண்கள் தற்போது அதிக அளவில் நீதிபதிகளாகவும் உள்ளனர். மேலும் நமது மாவட்டத்தைச் சேர்ந்த பலர் சட்டக் கல்வி பயின்று நீதி அரசர்களாக திகழ்ந்துள்ளனர். சட்டக் கல்வியினை மாணாக்கர்கள் பயில்வதன் மூலம் உயர்ந்த நிலையில் எட்ட முடியும். நமது மாவட்டத்தில் இது போன்ற இன்னும் புதிதாகவும் பல்வேறு அரசு கல்லூரிகள் தமிழக முதல்வர் தலைமையிலான அரசியல் தொடங்கப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்