சிவகங்கை : கூட்டுறவுத்துறை சார்பில் 69-ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவிகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி “முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நல்லாட்சி நடத்திவரும்
முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவுத் துறை மூலமாக விவசாயிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில்
213 வகையான கூட்டுறவு சங்கங்களுடன், வீட்டு வசதித் துறை, பால் வளத்துறை, சமூக நலத்துறை மற்றும் பட்டு வளர்ச்சி துறைகளிலும் கூட்டுறவு சங்கங்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 2022 – 2023 நிதி ஆண்டில் 2022 முடிய,, அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக, நகைக் கடன்கள், சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகம் உட்பட பல்வேறு கடனுதவிகள் மூலம் மொத்தம் 1,24,139 நபர்களுக்கு,
ரூ.955.67 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் “கூட்டுறவே நாட்டுயர்வு
என்ற அடிப்படையில் கூட்டுறவுத்துறை, விவசாயம் மற்றும் பொதுமக்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிடும், சீரிய துறையாக, கூட்டுறவுத் துறை திகழ்ந்துவருகிறது.
விவசாயப் பெருங்குடி மக்களுக்காக இந்தத் துறைக்கு தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்” என்றும் “அதற்கேற்ப இத்துறை சிறப்புடன் செயலாற்றிவருகிறது”
என்றும் “ஆகவே பொதுமக்கள், விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி, தங்களுடைய வாழ்வில் மேம்படவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் பல்வேறு துறைகளில் இருந்தும் பல்வேறு திட்டங்கள் மூலம் மொத்தம் 3,586 பயனாளிகளுக்கு ரூ.30.87 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கியியல் சார்ந்த பயன்கள் குறித்த கட்டுரை, பேச்சு, ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். முன்னதாக கூட்டுறவு கொடியினை அமைச்சர்கள் ஏற்றிவைத்து கூட்டுறவு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில்
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் சேங்கைமாறன், வேளாண்மை துறை துணை இயக்குநர் தனபால், மாவட்ட வழங்கல் அலுவலர் இரத்தினவேல், துறைசார்ந்த முதன்மையர்கள், பயனாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.