மதுரை : ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, டிசம்பர் மாதத்தில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை – செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) ஆகியவை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும் ,மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் (16868) டிசம்பர் 5 முதல் 10 வரையும் டிசம்பர் 12 முதல் 15 வரையும் 10 நாட்களுக்கு மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06654) டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு 60 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். மதுரை – கச்சக்குடா வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 7 அன்று மதுரையில் இருந்து காலை 05.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 06.30 மணிக்கு 60 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.
ரயில்வே ஊழியர்களுடன் கலந்துரையாடல் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் முன்னணியில் இருப்பவர்கள் ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள், ரயில்வே இன்ஜின் டிரைவர்கள், நிலைய அதிகாரிகள், பாயிண்ட்ஸ் மேன்கள், ரயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்கள், மின் பாதை பராமரிப்பு பணியாளர்கள், ரயில் மேலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் ஆவர். இந்த முன்னணி ஊழியர்களுடன் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது சம்பந்தமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி மதுரை ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஊழியர்கள் ரயில்களை மேலும் பாதுகாப்பாக இயக்குவதற்கு பணியிடங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் பல்வேறு புதிய ஆலோசனைகளை தெரிவித்தனர். கலந்துரையாடல் கூட்டத்திற்கு , கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமை வகித்தார். முது நிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முது நிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், முதுநிலை கோட்ட தொலை தொடர்பு பொறியாளர் ராம் பிரசாத், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், போட்டோ முதுநிலை மின் பொறியாளர்கள் பச்சு ரமேஷ், ரவிக்குமாரன் நாயர், உதவி பாதுகாப்பு ஆணையர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி