சிவகங்கை : தோட்டக்கலைத்துறையின் மூலம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய ரூர்பன் திட்டம் வாணியங்குடி தொகுப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இதில், வாணியங்குடி, சோழபுரம், சக்கந்தி, காஞ்சிரங்கால், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி கீழ்பாத்தி மற்றும் இடையமேலூர் ஆகிய கிராம பஞசாயத்துகளில் தலா ரூ.47.42 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சூரிய உலர்த்தி, கடலை மிட்டாய் உற்பத்தி, பால்கோவா உற்பத்தி, கால்நடை தீவனம் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு இயந்திரங்கள் ஆகிய ஆறு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
உற்பத்தி பணியினை அந்த அந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் இயந்திரங்கள் நிறுவும் பணி மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து கிராமத்தில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை ரூர்பன் நர்சரி செயல்பாடுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் க.வானதி, தோட்டக்கலை துணை இயக்குநர் கு.அழகுமலை, வேளாண்மை துணை இயக்குநர்(வே.வ) செல்வி.தமிழ்செல்வி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி