சிவகங்கை : தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி அகழ் வைப்பகக் கட்டிடப் பணிகள் தொடர்பாக, அரசு முதன்மைச் செயலாளர் – சிறப்பு செயலாக்க திட்டம், டி.உதயசந்திரன், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,ஆகியோர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடப் பணிகள் தொடர்பாக, அரசு முதன்மைச் செயலாளர் – சிறப்பு செயலாக்க திட்டம், டி.உதயசந்திரன், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆகியோர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில், நமது சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்கின்ற வகையில், அகழாய்வுப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அகழாய்வுப் பணியில் கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை பார்க்கின்ற வகையில், தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், கீழடியில் செட்டுநாடு கலைநயத்துடன் கூடிய ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பகக் கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் மட்டும் தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும், அகழாய்வின் போது கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பணிகள் தொடர்பாக இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தொல்லியியல் துறை ஆணையர் (மு.கூ.பொ) ஆர்.சிவானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.சிவராமன், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் (மதுரை கோட்டம்) கே.பி.சத்தியமூர்த்தி, கீழடி கட்டட மையம் (ம) பாதுகாப்பு கோட்டம், (சென்னை) செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி