விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பட்டாசு ஆலைகளை கண்காணிப்பதற்காக, மத்திய வெடிபொருள் கட்டுப்பாடுதுறை அலுவலகம் நாக்பூரில் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை அலுவலகம் சிவகாசி பகுதியில் உள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக, பட்டாசு ஆலைகளில் சோதனையில் ஈடுபட்ட வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அதிகாரிகள், விதி மீறல்கள் இருப்பதாகக்கூறி 70 பட்டாசு ஆலைகளின் உரிமங்களை தற்காலிக ரத்து செய்து, ஆலைகளை பூட்டி சீல் வைத்தனர். வழக்கமாக, மத்திய வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை உரிமம் பெற்று இயங்கும் ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தும் போது விதிமீறல்கள் மற்றும் குறைபாடுகள் இருந்தால், அந்த ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பின்னர் குறைபாடுகள் சரிசெய்த பின்பு, அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலை மீண்டும் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறையில் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள், மூடப்பட்ட பட்டாசு ஆலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் செயல்படத் துவங்கிவிடும். ஆனால் தற்போது விதி மீறல்களுக்காக, தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகள் குறித்து, நாக்பூரில் இருக்கும் இந்திய தலைமை மத்திய வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அதிகாரிகள் தான் ஆய்வு செய்து அனுமதி வழங்குவார்கள் என்ற புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பழைய முறைப்படி, சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் ஆய்வு செய்து, பட்டாசு ஆலைகள் இயங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக, 70 பட்டாசு ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. பட்டாசு ஆலைகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர்களும், இந்த 70 ஆலைகளில் வேலை பார்த்துவந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சிவகாசியில் இயங்கிவரும், மத்திய வெடிபொருள் கட்டுபாடுத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மூடப்பட்டுக் கிடக்கும் பட்டாசு ஆலைகளை உடனடியாக திறப்பதற்கான உத்தரவுகளை வழங்க வேண்டும். இல்லையென்றால் பட்டாசு தொழிலாளர் சங்கம் சார்பாக, மத்திய வெடிபொருள் கட்டுபாடுத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் கூறினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி