விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம், சாஸ்தா கோவில் அணையின் மூலம் தேவதானம், சேத்தூர், செட்டியார்பட்டி, தளவாய்புரம், சொக்கநாதன்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்பகுதி விவசாயிகள், தங்களது பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, தேவதானம் பகுதியில் உள்ள விவசாய கூட்டமைப்புக்கு சொந்தமான இடத்தில், தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்தப்பகுதியில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல் களத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு சில நாட்கள் மட்டுமே, நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நெல் களத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தேவதானம் பகுதியில் உள்ள கோவில் நிலங்களில் உள்ள நெல் அறுவடை பணிகள் நடந்து வருவதால் அதிகாரிகள் அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் அனைத்தும் முழுமையாக கொள்முதல் செய்யப்படும் என்று கூறினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி