விருதுநகர் : ராஜபாளையத்தில் சிவராத்திரி வழிபாட்டுக்கு சாவியை வழங்காத ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் கோயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முடங்கியாறு சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ரேணுகா தேவி கோயில் அமைந்துள்ளது. ரேணுகா தேவி அம்மனை அப் பகுதியை சேர்ந்த இரு தரப்பினர் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆடி வெள்ளிக்கிழமை வழிபாட்டிற்கு வந்த ஒரு தரப்பினருக்கு, மற்றொரு தரப்பினர் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம், வருவாய் துறையினர் தலையிட்டு சமரசம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், சிவராத்திரி வழிபாட்டுக்கு வந்தவர்களுக்கு, மற்றொரு தரப்பினர் கோயில் சாவியை வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இது குறித்து காவல் துறையில் அளித்த புகாருக்கு நடவடிக்கை இல்லை எனக்கூறி பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் 8 மணிக்கு மேல் கோயில் வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கோயிலை திறக்கும் வரை போராட்டத்தை கை விட பெண்கள் மறுத்து விட்டனர்.
இதனை அடுத்து, கோயிலை நிர்வாகம் செய்யும் தரப்பினரிடம் காவல் துறையினர் பேசி சாவியை வாங்கி வந்து கோயிலை திறந்த பின்னர் பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி