மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருகே குவாரிகளிலிருந்து செல்லும் டிப்பர் லாரிகளால் அவதிபடும் கிராமமக்கள். சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியிலிருந்து ராஜக்காள்பட்டி செல்லும் 3 கி.மீ தார்சாலையை 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018 ம் ஆண்டு போடப்பட்டது.
இச்சாலை வழியாக குவாரிகளுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. ஆனால், சாலையின் பராமரிப்பிற்காக ஒதுக்கீடு செய்யபட்ட 10 லட்சம் ரூபாயை ஒப்பந்த்தாரர் முறையாக பயன்படுத்தாமல் குண்டும் குழியுமான சாலையில் எம்.சாண்ட் தூசிமண்ணை கொட்டியுள்ளனர். தொடர்ந்து குவாரிகளிலிருந்து கனரகவாகனங்கள் சாலையில் செல்லும் போது, இப் பகுதிமுழுவதும்
அதிகளவில் தூசிபரவுகிறது.
இதனால், இப்பகுதி வீடுகள் முழுவதும் தூசி பரவி காற்று மாசு ஏற்படுவதால் இங்குள்ள மக்களின் சுவாசகாற்றில் தூசிமண் கலந்து ஆஸ்துமா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் அவதிபடுவதாகவும், சாலையில் விபத்துகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும், இச்சாலை வழியாக அதிகளவில் குவாரிகளுக்கு செல்லும் லாரிகளை மாற்றுபாதையில் இயக்கவேண்டும். சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்கள் கூறுகையில் பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித பயனும் இல்லை. தூசி பரவாமல் இருக்க தற்சமயம் சாலையில் தண்ணீர் மட்டுமாவது அடித்து தூசு பரவுவதை குவாரி உரிமையாளர்கள் தடுக்க வேண்டும். இதனால் காற்றுமாசு ஏற்படுவதால் முதியவர்கள், குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என தெரிவித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி