விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு, ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். நாளை 4ம் தேதி (சனி கிழமை) வளர்பிறை பிரதோஷம் நாளை முன்னிட்டு நாளை முதல், வரும் 8ம் தேதி (புதன் கிழமை) வரை தொடர்ந்து 5 நாட்கள் பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று, சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி வழங்கப்பட்டுள்ள 5 நாட்களும் காலை 6 மணி முதல், நன்பகல் 12 மணி வரை மட்டுமே அடிவாரப் பகுதியிலிருந்து, மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சனி கிழமை, மகா சனிப்பிரதோஷம் நாளாக இருப்பதால் நாளை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுநாள் ஞாயிறு கிழமை விடுமுறை நாளாக இருப்பதால் அன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் வரும் 6ம் தேதி திங்கள் கிழமையன்று மாசி மகம் திருநாளும், மறுநாள் 7ம் தேதி மாசி பௌர்ணமி திருநாளும் வருவதால், வரும் 5 நாட்களும் சதுரகிரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி