விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோவில்களில் நேற்று, மாசி மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு இரவில் இருந்து இன்று அதிகாலை வரை விடியவிடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவகாசி ஜக்கம்மா கோவிலில் மாசி பெருந்திருவிழா நேற்று இரவு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. மேலும், மாலையம்மன் கோவில், தோப்பு கருப்பசாமி கோவில், வீரமாடன் சுவாமி கோவில், சுடலைமாடன் சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் பாரி வேட்டை, மயானக் கொள்ளை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குவிந்துள்ளனர். நேற்று இரவு முழுவதும் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடியவிடிய மேளச் சத்தம், குலவைச் சத்தம் கேட்டபடியே இருந்தது. இன்றும், நாளையும் குல தெய்வக் கோவில்களில் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி