மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள பேருந்து நிறுத்தத்தில், குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரமாக பேருந்துக்காக காத்திருந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தானை அடுத்து உள்ள குருவித்துறை கிராமத்திற்கு வரவேண்டிய பேருந்துகள் அனைத்தும் மாலை 7 மணி முதல் 10 மணி ஆகியும் வராததால், பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மறியலால் அந்த பகுதியில் செல்ல வேண்டிய பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மாற்று வழியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்த, சோழவந்தான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . ஆனால், சமாதானம் அடையாத பொதுமக்கள் காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தொடர்ந்து இதுபோன்று நடப்பதாகவும் இதுகுறித்து சோழவந்தான் அரசு பணிமனை மேலாளரை தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை என்றும், காவல்துறையினர் போன் செய்தும் போனை மேலாளர் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறும் போது சோழவந்தான் பகுதிக்கு வர வேண்டிய பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என்றும் தொடர்ந்து பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்எனக், கேட்டுக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி