விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை சார்பாக சிவகாசி வட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக 4 ஆயிரத்து 374 பயனாளர்களுக்கு கொடுக்கப்பட்ட, 7 கோடியே 24 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நேரில் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம்தென்னரசு பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான நேரம் நெருங்கி வந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார்.
பெண்கள், யாரையும் சார்ந்திருக்காமல் தங்களை தாங்களே சார்ந்திருக்கும் நிலையை உருவாக்க வேண்டும். தந்தை இருந்தாலும், கணவர் இருந்தாலும் மற்றொருவரை சார்ந்து இருக்காமல், ஒரு பெண் தன்னை தானே சார்ந்தவராக இருக்கும் தற்சார்பு நிலைக்கு வந்தால் மட்டுமே, பெண்களுக்கான உண்மையான விடுதலை கிடைத்ததாக பெருமைப்பட முடியும். தமிழ்நாட்டில் தான் தொழில்துறை, தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட பல துறைகளிலும் அதிகளவில் பெண்கள் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். உயர்கல்வியிலும் தமிழகம் தான் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக, முதல் மாநிலமாக இருந்து வருகிறது. பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதியதாக கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த புதிய கடனையும், அரசு தள்ளுபடி செய்துவிடும் என்று நினைக்காமல், கடனை முறையாக செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி, துணைத் தலைவர் விவேகன்ராஜ் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி