மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நாச்சிகுளம், கருப்பட்டி கரட்டுப்பட்டி பகுதியில் சுமார் 3000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் நேற்று பெய்த ஆலங்கட்டி மழையில் சேதம் அடைந்தது நிவாரணம் வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சோழவந்தான் எம்எல்ஏ, ஆகியோர் நேரில் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கீழ் நாச்சி குளம், மேல் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, கருப்பட்டி, இரும்பாடி பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இரண்டாம் போக அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் பலத்த காற்றுடன் நேற்று பெய்த கன மழையால் சுமார் 3000 ஏக்கர் இப்பகுதியில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் முற்றிலுமாக நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. மழையும் காற்றும் சேர்ந்து பெய்ததில் நெல்மணிகள் முற்றிலுமாக உதிர்ந்து விட்டது.
இதனால், இப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட நிர்வாகமும், விவசாயத்துறை அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அமைச்சர் மூர்த்தி , சோழவந்தான்
சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தாங்கள் ஒரு ஏக்கருக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிர் செய்துள்ளதால், உடனடியாக ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், கடந்த காலங்களின் போது நிவாரணம் கூறி தராமல் சென்ற தொகையையும் உடனடியாக தர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இன்று நடைபெறும் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியாக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்