மதுரை : மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த ரயில் நிலையம் மூலம், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50 க்கு மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனப் போக்கின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ரயில் நிலையத்தில் மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. அதனை சரி செய்ய எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், இரவு நேரங்களில் வரும் பயணிகள் அலுவலர்கள் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் வயல்வெளிகள் அதிகம் இருப்பதால் அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகம் வசித்து வருகின்றன. இதனால், இரவு நேரங்களில் வரும் பயணிகள் பாதுகாப்பில்லாத நிலையில், மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். சிறு குழந்தைகளுடன் வரும் பயணிகள், மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். இதனால், குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ரயில்வே நிர்வாகம், மின்விளக்குகளை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி ரயில் பயணிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி